You can read the message in English here => You are not alone. Never alone!
அன்பு நண்பரே, பலர் நம்முடன் சூழ்ந்திருந்தாலும் தனிமை ஒருவரின் வாழ்வில் தோன்ற வாய்ப்பு உண்டு. சமூக அமைப்புகளில் (Social Media) இரவும் பகலும் வேலை செய்பவர்கள் கூட தனிமையை உணர்கிறார்கள்.
ஒரு பத்திரிகையின் ஆசிரியர் சமீபத்தில் அவர் அனுபவிக்கும் தனிமை உணர்வுகளைப் பற்றி எங்களுக்கு எழுதினார். ஒரு இளம் டீனேஜர் தனது தாயும் தந்தையும் பிரிந்த பிறகு தனது வாழ்க்கையின் தனிமையை பற்றி எங்களுக்கு எழுதினார். பெரும் கடனைக் குவித்த பின்னர் தனது கடன் வழங்குநர்களிடமிருந்து ஒளிந்து கொண்டு ஓடும் நபர் ஒருவர் தனிமையை உணர்ந்தார். மனச்சோர்வு நோய் ஒருவரை தனிமைக்கு தள்ளுவதற்கு வாய்ப்பு அதிகம்.
மேலே உள்ள அனைத்து வகை மக்களுக்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவர்களைப் பற்றி அக்கறை கொள்வதற்கு அன்பு செலுத்துவதற்கு யாரும் இல்லை. பெரும்பாலும் தனிமையில் இருப்பவர்கள் தனக்கு யாருமே இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் தனித்து விடப்படுகிறார்கள்.
ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் கடினமான நேரங்களை அனுபவிக்கும் போது தனிமையாக போராட்டங்களை அனுபவிக்கிறார்கள். ஒரு மனைவி அல்லது கணவன் தங்கள் உறவு குளிர்ச்சியடையும் போது தனிமையை உணர்கிறார். நேசிக்கப்படாத மற்றும் பயனற்றதாக உணரும் நபர்கள் தனிமையின் அழுத்தத்தை உணர்கிறார்கள்.
பலர் தனிமையை சமாளிக்க, தங்களை மகிழ்விக்க நண்பர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் வீடு திரும்பும்போது தனிமையான மக்களாகத்தான் வீடு திரும்புகிறார்கள். தனிமையை குணப்படுத்த மருந்து இருக்கிறதா?
நீங்கள் தனியாக இல்லை
பிரியமானவர்களே. இயேசு இன்று உங்களோடு இருக்கிறார். உண்மை என்னவென்றால், நாம் தனியாக இருப்பதற்காக ஒருபோதும் படைக்கப்படவில்லை. நம் மனம் கடவுளோடு நெருக்கமான, நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாம் இயேசுவோடு நெருங்கிய உறவை ஏற்படுத்தும் பொழுது நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும்.புதிய நோக்கத்தையும் அவரால் கொடுக்க முடியும். நாம் அதை ஒருபோதும் உணரவில்லை, ஆனால் நாமோ தேவைப்படும் நேரங்களில் மாத்திரம் அவரது பெயரை அழைக்கவோ முயற்சிக்கிறோம்.
தேவன் கூறுகிறார், “நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்” தேவன் தனது கரங்களைத் திறந்து அனைவருக்கும் ஒரு அழைப்பை கொடுக்கிறார். அனைவரையும் வரவேற்க தயாராக இருக்கிறார். பணக்காரர்களும் ஏழைகளும், பாவியும் துறவியும், படித்தவர்களும் படிக்காதவர்களும், தகுதி பெற்றவர்களும், தகுதியற்றவர்களும், உலகின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களும், நீங்களும் நானும், மற்றவர்களும் அவருடைய மகிமையான பிரசன்னத்திற்கு வரவேற்கப்படுகிறோம்.
இயேசு எருசலேம் நகரத்தைப் மனஸ்தாபப்பட்டு சொன்னார். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. என்றார். – லூக்கா 13:34.
இயேசு எப்போதும் நம்மோடு நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் நாம் பெரும்பாலும் நம் சொந்த வாழ்க்கையிலும் வழிகளிலும் பிசியாக இருக்கிறோம். இந்த பரபரப்பான உலகத்தில் கடவுளுக்கு நேரம் கொடுப்பது இல்லை. அவரிடம் பேசவோ, அவருடைய வார்த்தைகளைக் கேட்கவோ நமக்கு நேரமில்லை. இயேசு இன்று உங்களை சந்திக்க கண்ணீரோடும் ஏக்கத்தோடும் காத்திருக்கிறார். நீங்கள் அவருடைய விலையேறப்பெற்ற பிள்ளை.
நம் ஒவ்வொருவரோடும் கூட நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளவே அவர் விரும்புகிறார். இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்க முடியாத அளவுக்கு எந்த பாவமும் பெரிதல்ல. தகுதியற்றவர்களை தகுதிப்படுத்த அவர் தயாராக இருக்கிறார். இயேசு ஏற்கனவே நம் எல்லோருக்காகவும். சிலுவையில் விலையை செலுத்தினார்.
நாம் தனியாக இல்லை. நாம் ஒருபோதும் தனியாக இருந்ததில்லை. நாம் தனியாக இருப்பதாக நாம் உணருகிறோம் என்றால் அதற்குக் காரணம், தேவன் நமக்காக வைத்துள்ள மகத்தான அழைப்பை நாம் அறியாததே.
ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கடவுளால் வடிவமைக்கப்பட்ட வெற்றிடம் உள்ளது, அதை எந்த படைப்பினாலும் திருப்திப்படுத்த முடியாது, ஆனால் அந்த வெற்றிடம் இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்துவினால் மாத்திரமே திருப்தி செய்ய முடியும்.
– பாஸ்கல் (பிரெஞ்சு கணிதவியலாளர்)
கடவுள் கூறுகிறார், “நீ என்னுடையவன்.”
வேதாகமம் சொல்லுகிறது: “யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.“
கடவுள் நம்மைப் படைத்தார் நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் பெருமையோடு நம்மை அழைக்கிறார். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு உடையும் பொழுது ஒரு வெற்றிடம் நம் வாழ்க்கையிலே உருவாகிறது. அந்த வெற்றிடம் நம்மை தனிமைக்கு தள்ள முடியும்.
இறைவன் சொல்கிறார், “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” – ஏசாயா 49:15
கடவுள் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதை அவர் ஒருபோதும் நிறுத்துவதில்லை. ஏனென்றால் நாம் அவருடையவர்கள். அவரே நம்மைப் படைத்தார்.
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” என்று வேதாகமம் கூறுகிறது.
பூமியில் முதல் மனிதனுக்கு அவர் கொடுத்த அதே மூச்சு தான் நாம் நம் தாயின் வயிற்றில் இருந்தபோது நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. நாம் ஒவ்வொரு நாளும் கடவுளின் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றுகிறோம். நமக்கு சுவாசத்தைக் கொடுத்து உயிர்ப்பித்த தேவனிடமிருந்து நாம் எப்படி பிரிக்கப்பட முடியும்? நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் சொந்தமானவர்கள். நாம் அவருக்கும் அவருக்கும் உரியவர்கள்.
கடினமான காலங்களில் தனிமை
கடினமான காலங்களில் இயேசு நம்மை தனியாக விட்டுவிடுவதில்லை.. அன்புள்ள வாசகரே, நோய், நேசிப்பவரிடமிருந்து பிரிதல் அல்லது வேறு ஏதேனும் கடினமான சூழ்நிலையின் மத்தியில் நீங்கள் இதைப் படிக்கிறீர்களா?
உங்கள் பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை. இயேசு உன்னோடு இருக்கிறார். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.” என்று கூறினார். இது அனைவருக்கும் இயேசுவின் வாக்குத்தத்தம். அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். ஆனால் நாம் இயேசுவை நம் வாழ்வில் எங்கேயோ தனியாக விட்டுச் சென்றிருக்கலாம். நாம் கடவுளை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றிருக்கலாம். ஒரு வேலை நீங்கள் அப்படி செய்திருந்தால் இப்போது அவருடன் சமரசம் செய்ய வேண்டிய நேரம் இது.
இந்த உலகத்தில் நமக்கு அநேக பாரங்கள் உண்டு என்று இயேசுவுக்கு தெரியும். நம்முடைய எல்லா சுமைகளையும் நாமே சுமக்க வேண்டுமென்று இயேசு ஒருபோதும் விரும்பியதில்லை. நம்முடைய பாரங்களையெல்லாம் அவர் தன்மேல் சிலுவையிலே ஏற்றுக்கொண்டார்.
வேதம் சொல்லுகிறது: “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
நமக்காக இயேசு நம்முடைய பாரங்களையெல்லாம் சிலுவையில் சுமந்திருக்கும்போது நாம் ஏன் அவற்றை சுமக்க வேண்டும்?
அவருடைய பிரசன்னத்துக்குச் சென்று நம்முடைய இருதயத்தின் பாரங்களையெல்லாம் இறக்கி வைப்போம். அவர் இப்போது உங்களுடன் பேச விரும்புகிறார். அவர் உங்கள் நண்பராகவும், ஆலோசகராகவும், பெரிய ஆறுதலளிப்பவராகவும் இருக்க விரும்புகிறார். இன்று இயேசுவை உங்கள் நண்பராக அழைக்க நீங்கள் தயாரா?
நீங்கள் சமீபத்தில் இயேசுவுடன் ஒப்புரவாகவில்லை என்றால், தயவுசெய்து அவருடன் ஒப்புரவாகுங்கள். உங்களுடைய கடந்தகால தவறுகள் அனைத்தையும் மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள். அவரை உங்கள் இருதயத்திற்குள் அழையுங்கள். அவர் உங்கள் தனிமையை நீக்கி, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து உங்களை வழிநடத்துவார்.
தயவுசெய்து உங்கள் கையை உங்கள் இதயத்தில் வைத்து இயேசுவின் நாமத்தை அழைக்கவும். கீழே உள்ள பிரார்த்தனையை எங்களுடன் சேர்ந்து உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபியுங்கள்.
அன்புள்ள இயேசுவே, நான் தாழ்மையான இருதயத்தோடு உங்களிடம் வருகிறேன். நீங்கள் இப்போது என்னுடன் இருக்கிறீர்கள். இந்த உலகில் வேறு எவரையும் விட நீங்கள் என் இதயத்தைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எனக்காக சிலுவையில் மரித்த தேவன் நீரே. தயவு செய்து என் வாழ்வில் வாருங்கள். எனது கடந்த கால தவறுகள் அனைத்தையும் மன்னித்தருளும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னைக் கழுவும். என்னைப் பரிசுத்தமாக்குங்கள். என் மனதில் இருந்து அனைத்து எதிர்மறை (Negative) எண்ணங்களையும் அகற்றுங்கள். என் தேவனாயிருந்து, என்னை வழிநடத்தும். உமக்குக் கீழ்ப்படிந்து என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் பற்றிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். தனிமை உணர்வை அகற்றுங்கள். இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன். உங்க மேல முழு நம்பிக்கை வச்சிருக்கேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
அன்பு நண்பரே, எங்களுடன் பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றி. இயேசு உன்னை நேசிக்கிறார். அவர் உங்கள் கைகளைப் பிடித்து உங்களை வழிநடத்துவார். அவர் நிச்சயம் உங்களை ஆறுதல்படுத்தி, உங்கள் கண்ணீரையெல்லாம் துடைப்பார். நீங்கள் எப்போதும் தனியாக இல்லை. இயேசு உங்களோடு தொடர்ந்து இருப்பார். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த அழகான சங்கீதத்துடன் இதை முடிக்க விரும்புகிறோம்.
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
சங்கீதம் 139:7-2