Home » தியானம் » ஜெபம் » என் இதயத்தை ஊற்றக்கூடிய இடம் இருக்கிறதா?

என் இதயத்தை ஊற்றக்கூடிய இடம் இருக்கிறதா?


5.0

               

                    

You can read the message in English here => Is there a place where I can pour out my heart?

அன்பு நண்பரே, பூமியில் நமது குறுகிய பயணத்தில் சில நேரங்களில் நமக்கு பிரச்சனைகள் வருவதுண்டு. நாம் பணக்காரரா, ஏழையா, படித்தவரா, படிக்காதவரா, இளைஞரா, முதியவரா என்பது முக்கியமல்ல. நம்மில் ஒவ்வொருவரும் ஒரு கடினமான சூழ்நிலையை கடந்து செல்கிறோம். இந்த கடினமான சூழ்நிலைகளில், நம் இருதயத்தை ஊற்றுவதற்கு ஒருவர் தேவை. நாம் நம்பி நம் இருதயத்தை ஊற்றுவதற்கு ஒரு இடம் இடமுண்டா? நம்முடைய இருதயத்தை புரிந்துகொண்டு ஆறுதல்படுத்தும் இடமுண்டா?

தாவீது தனது இளம் வயதில் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். தீர்க்கதரிசன வார்த்தை சாமுவேல் தீர்க்கதரிசியிடமிருந்து வந்தது. அவர் சாதாரண தீர்க்கதரிசி அல்ல. சாமுவேல் சிறு வயதிலிருந்தே தேவனோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த ஒரு மனிதன். அவர் கொடுத்த தீர்க்கதரிசனம் நம்பகமானது. தேவன் தாமே தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனாலும், தாவீது சவுலுக்கு பயந்து குகைகளில் ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது, கொலை முயற்சிகளிலிருந்து மயிரிழையில் தப்பிக்க வேண்டியிருந்தது, சாமுவேலின் தீர்க்கதரிசனம் அவரது வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது, அதுவரை அவர் காட்டுக்கு ஓடிப்போய் தனது உயிரைக் காப்பாற்ற, ஒரு பைத்தியக்காரனைப் போல செயல்பட வேண்டியிருந்தது. அந்தப் பத்து வருடங்கள் தாவீதுக்கு மிகவும் மனச்சோர்வான நாட்கள். தாவீதின் மகிமையான இளமைப் பருவம் முழுவதும் மரணத்திலிருந்து தப்பிப்பதற்கே கழிந்தது.

இந்த நம்பிக்கையற்ற ஆண்டுகளில் இருந்து தப்பிக்க தாவீது என்ன செய்தார? நாம் கடினமான காலங்களில் செல்லும்போது தாவீதின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. தன் இருதயத்தை தேவனிடத்தில் எப்படி ஊற்றுவது என்பதை தாவீது அறிந்திருந்தார்.

அவர் செய்த உருக்கமான ஜெபங்களில் சில பைபிளில் இருக்கின்றன. தாவீது தனது சிக்கலான காலங்களில் தனது சங்கீதங்களில் பலவற்றை எழுதினார். அவர் தனது இருதயத்தை கடவுளிடம் ஊற்றுவதற்கு இந்த சங்கீதங்களைப் பயன்படுத்தினார், மேலும் கடவுளை எப்போதும் தன் பக்கம் இருக்கும்படி கேட்டார். அவர் தன் நம்பிக்கையற்ற எண்ணங்களைத் தனக்குள் வைத்துக் கொள்ளவில்லை, அவர் தன் இருதயத்தின் பாரங்களையும், கசப்புகளையும், ஏமாற்றங்களையும் கடவுளின் சந்நிதியில் ஊற்றிவிட்டார். அவர் நம்பிக்கையின் கடவுளிடமிருந்து நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டே இருந்தார்.

அனேக வருடம் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சிலருக்கு தன்னுடைய மனதில் உள்ள பாரங்களை கடவுளுடைய சன்னிதியிலேயே இறக்கி வைக்க கற்றுக் கொள்ளவில்லை.

நமது கடினமான சூழ்நிலைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம்? அவற்றை எவ்வாறு நிர்வகிக்கிறோம்?

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீது தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்” என்று எழுதினார்

ஆமாம் நண்பரே. படுகுழியிலிருந்து நம்மை மீட்கவும், நமது நோயை குணமாக்கவும் தேவன் அறிந்திருக்கிறார். அவர் இப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் உங்கள் பக்கத்திலேயே நிற்கிறார். அவருடைய பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வந்தது போல உங்களையும் வெளியே கொண்டு வருவார்.

தேவனுடைய பிரசன்னத்தில் நம்முடைய இருதயங்களை எப்படி ஊற்றுவது?

நாம் தாவீது போன்ற திறமையான இசைக்கலைஞராகவோ அல்லது கவிஞராகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் பிரார்த்தனைகளின் மூலம் நம் இதயங்கதை ஆண்டவருடைய சமூகத்திலே ஊற்றிவிட முடியும். தாவீது ஜெபித்தார், “கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?” – சங்கீதம் 10:1

கஷ்ட காலங்களில் தாவீது எப்படி உணர்ந்தாரோ அதேபோல் நம் வாழ்விலும் தேவன் வெகு தூரத்தில் நிற்பதை போல் நாமும் உணரலாம்.

இன்னொரு சமயம், ஒரு கூட்டத்தார் தாவீதை ஏமாற்றி, பிடிப்பதற்காக அவர் இருக்கும் இடத்தைத் தெரிவித்தபோது, அவர் தனக்கு ஆதரவாக இருக்கும்படி கடவுளிடம் ஜெபித்தார். “தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.” என்று கூறினார்.

நம் இருதயத்தை இயேசுவிடம் ஊற்றவும், அவருடைய உதவியை நாடவும் கற்றுக்கொள்வோம். தாவீது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இறந்தார். ஆனால் அவரது சரித்திரம் நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

தேவன் தாவீதுக்கு அரசுரிமையை வாக்களித்தார். பல ஆண்டுகள் காத்திருந்த பின்பு, அவர் ஒரு ராஜாவாக ஆனார்.

தாவீதுக்கு வாக்கு கொடுத்த அதே தேவன் நமக்கும் பரலோகத்தில் நித்தியத்தை வாக்களித்தார். வேதாகமம் சொல்லுகிறது, “… நீங்களோ தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” – 1 பேதுரு 2:9

இது இயேசு நமக்கு கொடுத்த வாக்குறுதி. இந்த வாக்குறுதி உண்மையானது. இதைப் வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இது கடவுளிடமிருந்தே வருகிறது. வாக்குறுதியை அடைவதற்கான பயணம் எளிதானது அல்ல. ஆனால் பயணத்தில் நமக்கு உதவ இயேசு நம்முடன் இருப்பார். அவரை முகமுகமாய் ஒரு நாள் பார்ப்போம்.

நாம் இப்பொழுது இயேசுவிடம் ஜெபிக்க போகிறோம். நம்முடைய இருதயங்களை அவரிடத்திலே ஊற்ற போகிறாம்.

நமது பயங்களையும் விரக்தியையும் மிகுந்த அக்கறையுடன் நமது பரலோக பிதாவைத் தவிர வேறு யார் கேட்க முடியும்? அவர் நம்முடைய வியாதிகளையும் துக்கங்களையும் சுமந்தார். நம்முடைய கடந்த கால பாவங்களை மன்னிக்க அவர் சிலுவையில் மரித்தார். உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.

அன்புள்ள இயேசுவே, நாங்கள் உங்கள் பிரசன்னத்திற்கு வருகிறோம். நாங்கள் உமது நாமத்தில் ஒன்றுபட்டு எங்கள் இருதயங்களை உம்மிடம் ஊற்ற விரும்புகிறோம். எங்கள் வாழ்வில் வாருங்கள். எங்களிடமிருந்து தூரமாக நிற்க வேண்டாம். எங்கள் பாவங்களை மன்னித்து விடுங்கள். எங்களை புதியவர்களாக்குங்கள். உங்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தால் எங்களைக் கழுவுங்கள். உங்கள் முகத்தை எங்களுக்கு மறைக்காதேயும். நீங்கள் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் தனியாக இல்லை. உங்கள் வாக்குறுதியையும், உமது மகத்தான அழைப்பையும் எங்கள் இருதயங்கள் எப்பொழுதும் நினைவுகூரட்டும். எங்கள் இதயங்களைத் தொடுங்கள். காயங்கள் அனைத்தையும் அகற்றவும். உமது பரலோக சமாதானத்தால் எங்களை நிரப்பும். எங்களை வழிநடத்தி எங்கள் இருதயங்களை ஆறுதல்படுத்தும். எல்லா நோய்களையும் துக்கத்தையும் நீக்குங்கள். நாங்கள் உங்களை நம்புகிறோம், எங்கள் நம்பிக்கை அனைத்தையும் உங்கள் மீது வைக்கிறோம். இயேசுவின் வல்லமையான நாமத்தில், ஜெபிக்கிறோம். ஆமென்.

இயேசுவுக்கு நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரியும். அவர் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வது என்று நமக்கு கற்றுக் கொடுப்பார்.

இயேசு மனிதனாய் இருக்கும் பொழுது நம்மை போல பலவீனத்தையும், சோதனையையும், வேதனையையும் கடந்து வந்திருக்கிறார். நம் நிலையை அவரால் புரிந்து கொள்ள முடியும். அவர் நம்மோடுகூட நமக்காகவும் ஜெபிக்கிறார்.

உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இயேசு நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார். அவர் உங்களை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுவிப்பார். கடவுள் உங்களை ஆசீர்வதித்து பலருக்கு ஆசீர்வாதமாக மாற்றட்டும்.

Leave a Comment

நீங்கள் இயேசுவை ஏற்று கொண்டீர்களா. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம்.

ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு, உங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.

       

Topics

விடுதலை தியானம் இயேசுவைப் பற்றி